Thursday, 17 March 2016

கீழடி ஆகழ்வாய்வு

சென்ற வாரம், வெள்ளிக்கிழமை அன்று, கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தமிழ் இணையம் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம். கீழடி, சென்ற ஆண்டே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு, முடியாது போனதால், இந்தக் கூட்டதிற்காவது செல்ல எண்ணினோம்!



ஐயா அமர்நாத் ராமகிருஷ்ணா , அவர்கள் கீழடி அகழ்வாய்வு கூடத்தின் தலைமை நிர்வாகி. இந்திய தொல்லியல் துறையில் பணிபுரிகிறார். எந்த விதமான சுற்றிவளைப்பும் இல்லாமல் நேரடியாக, அவர்கள் எப்படி இப்படி ஒரு இடத்தைக் கண்டுபிடித்து , அகழ்வாய்வுச் செய்ய ஆரம்பித்தார்கள் என்று பகிர்ந்துகொண்டார்.

உண்மையில், அகழ்வாய்வு என்பது ஒரு, ஆராய்ச்சியை போல பல கட்ட நிலைகளை கொண்டது. அதை பின்பற்றி, செய்யப்படும் தமிழகத்தின் முதல் அகழ்வாய்வு கீழடி தான். முதலாவதாக, ஆற்றோரக் குடியிருப்பு பகுதியை ஆய்வுச் செய்ய வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். அதற்கான தலமாக அவர்கள், வைகையைத் தேர்வு செய்கின்றனர். வைகையின் ஆரம்ப பகுதியில் தொடங்கி, இறுதி வரை ஆராய்கின்றனர். ஆற்றில் இருந்து,இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்கின்றனர். இதில் தேனி ,திண்டுக்கல்லின் சில பகுதிகள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

முதல் கட்ட ஆய்வில், 170 இடங்களில் மக்கள் வாழ்விடங்களின் சுவடுகளும், சிலைகளும், சில புராதன சின்னங்களும், நடுகற்கள், கொற்றவை சிலைகள், சில வழிபாடுகளற்ற கோவில்கள் என பலவகையான விசயங்கள் அவர்களுக்கு கிடைத்தது.
அவர்களுக்கு கிடைத்த, பிற இடங்களை விட கீழடி அவர்களை பெரிதும் ஈர்த்தது. அதன் அளவும், மதுரைக்கு மிக அருகில் இருக்கும் இடம் என்பதும் மிக முக்கிய காரணங்கள். இதுவரை, மதுரையின் வளர்ச்சியை அறிய எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதற்கான தலமும் அமையவில்லை. அப்படி கிடைத்த சில இடங்களும், மதுரையின் அசுரவேக நகரமயமாக்களில் சிக்கி சிதைந்து உள்ளது.

கீழடி, மதுரையின் சமூக, கலாச்சார மாற்றங்களின் நிகழ்வை விவரிக்கும் ஒரு ஆய்வாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். இந்த ஆய்வு, தென்தமிழகத்தின் கலாச்சார மாற்றங்களுக்கும், வரலாற்று ஆய்விற்கும் துணை புரியும் என்று கூறுகிறார்கள்.

கீழடி, மதுரையில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில், பழைய மதுரை – ராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ளது. வரலாற்று ஆய்வுகளின் படி, பதிமூன்றாம் நூற்றாண்டில், இந்த ஊர் “குந்திதேவி சதுர்வேதி மங்களம்” என்று , ஒரு பாண்டிய அரசியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது.இந்த தளத்திற்கு அருகில் இன்னொரு மேடும், கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கீழடியில் மூன்று இடங்களில் ஆகழ்வாய்வு நடத்தபட்டுள்ளது. அவை ஒன்று, இரண்டு, இரண்டாம் தளம் விரிவுபடுததப்பட்ட பகுதி முதலியவை. மூன்றையும் சேர்த்து, மொத்தம் நாற்பது மூன்று குழிகள் வெட்டப்பட்டுள்ளது.

தோராயமாக, இந்த இடத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆறு அடுக்குகள் மண் தெரிகிறது. அதன் கடைசி அடுக்கில், சிகப்பு மற்றும் கருப்பு பானை ஓடுகள் கிடைகின்றன.

இது ஒரு குடியிருப்பு பகுதி, என்பதற்கு சான்றாக பல கட்டிடங்களின் பாகங்கள் கிடைகின்றன. இங்கு கிடைக்கும் செங்கல்லின் அளவுகள் முறையே, 36x24x7  & 34x23x6  & 33x21x5 இவை சங்க கால செங்கல்களின் அளவீடுகளோடு இருகின்றது. கைகளால் செய்யப்பட கூரை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இரண்டு வகையான உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1800 தொல்பொருள் மிச்சங்கள் கிடைத்துள்ளன.முத்துக்களும், கண்ணாடி மணிகளும், செப்பு காசுகளும், சுடுமண் பொம்மைகளும், சுடுமண் மணிகளும், உலோக பொருட்களும், யானை தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்களும், சங்கு வளையல்களும் கிடைத்துள்ளன.





சில பெயர்கள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ள, அவை “திசன்”, “உதிரன்”, “அதன்”, “இயணன்”, “சுரம” போன்றவை என்று படிக்கப்பட்டதாம். தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த 2 CE – 1ST CE கிடைத்துள்ளன. 350 ஓவிய எழுத்துக்கள் கொண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இங்கு கருப்பு சிவப்பு பானை ஓடுகள், வெள்ளை வண்ணத்தில் கோடுகள் வரைந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், சாதவாகனர் பானை ஓடுகள்   எனப்படும் ஆந்திர பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவை இதுவரை கிடைத்துள்ளன.
ஐயா, அவர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டிருந்தப் போது , சில பானைகளின் நடுவில் ஓட்டை இருப்பது போல இருக்கும் பானைகள் கிடைத்ததாம். இவை எதற்கு பயன்பட்டது என்று தெரியவில்லையாம். சில, நாட்கள் கழித்து ஐயா அவர்களின் மேலாளர் வந்து இந்த பானைகள், வட இந்தியாவில் காணப்படுபவை என்றார்களாம்.

இந்த தலத்தை, தேர்வு செய்ய மேலும் ஒரு காரணம் இருந்தது. அது கீழடிக்கு அருகில்  ஒரு  பழைய இடுகாடு இருந்த இடம் கண்டிறியப்பட்டது தான். தமிழகத்தில் இதுவரை “இறந்தவர்களை புதைக்கும்” இடுகாடுகள் மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடுகாடுக்கும், வாழ்விடங்களுக்கும் என்ன தொடர்பு என்பது அறியப்படவில்லை. அதை அறிய இந்த ஆய்வு உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒரு லட்சம் பேர் வரை இந்த ஆய்விடத்தை பார்த்து சென்றுள்ளனர்.

இப்போது, இரண்டாம் கட்ட ஆய்வு தொடங்கி உள்ளது. இதன் முக்கிய நோக்கம், முதல் ஆய்வில் கிடைத்த சில கட்டிட பகுதிகளின் முழுமையை அறிவது. இதன் மூலம் சங்க காலத்தின் கட்டுமான முறைகளை அறிய முடிகிறதா என்று தெரிந்துக்கொள்ளலாம் .இதுவரை முப்பத்து இரண்டு குழிகள் தொண்டப்பட்டுள்ளன. இப்போதும், சங்க கால செங்கல் அளவுகள் கொண்ட கற்கள் கிடைத்துள்ளன. சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு பெருமளவில் கட்டுமான பகுதிகள் கிடைத்துள்ளன.

இதுவரை , .......... தொல்பொருள் மிச்சங்களும், மணிகளும் , கண்ணாடி மணிகள் பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களிலும் , செப்பு காசு ஒன்றும், சுடுமண் பொம்மைகளும், உலோக பொருட்களும், சங்கு வளையல்களும் கிடைத்துள்ளன. மிக அழகிய ஒரு முத்திரை சின்னம் பொறிக்கும் கருவியும், பானை ஓடுகளும், கிடைத்துள்ளன.

மிக நீண்ட பதிவு.சொல்வதை விட கீழடி சென்று பார்த்தால் இன்னும் நிறைய விசயங்கள் புரியும். நாம் நம் வரலாற்றை காக்க இது ஒரு அரிய வாய்ப்பு. பல நூறு, தலங்கள் இதை போன்று ஆய்வு செய்ய யாரும் இல்லாத காரணத்தினால், அழித்து போய்விட்டது. கீழடியை காப்போம்! ஆங்கு அகழ்வாய்வு செய்து, அறிவியல் பூர்வமான கால அளவை தர பல ஆண்டுகள் ஆகும் என்று ஐயா கூறினார்! அடுத்த தலைமுறைக்கு இன்னும் பெருமை சேர்க்க, வரலாற்றை பாதுகாப்போம்.