Sunday, 20 November 2016

திருமலை திருப்பதி கல்வெட்டுகள் – ஒரு அறிமுகம்


திருமலை திருப்பதி கல்வெட்டு – ஒரு அறிமுகம் திருமலை திருப்பதி கல்வெட்டு – ஒரு அறிமுகம் என்னும் தலைப்பில் “புக் மையின்” சார்பில்  பேராசிரியர் மதுசூதனன் கலைசெல்வன் அவர்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பு இன்று எங்களுக்கு கிடைத்தது. சில வாரங்களுக்கு முன் நடந்த சொற்பொழிவை சில காரணங்களால் தவற விட்டோம், ஆனால் இன்று இந்த அருமையான நிகழ்வை ஏற்படுத்தி தந்த சுதா உமாசங்கர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 
எப்படி எழுதினாலும், மதுசூதனன் அவர்களின் முழு சொற்பொழிவையும் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. திருமலையில்  உள்ள கல்வெட்டுகள், அவற்றின் காலம் , அதன் விழாக்கள், பிரசாதங்கள், உற்சவர், மூலவர், தங்க  தகடு பதித்த விமானம், திருப்பதி நகரின் வளர்ச்சி, அங்கு உள்ள மடங்கள், என்று நீண்ட பேச்சு.இங்கு ஆயிரத்து இருநூறு கல்வெட்டுகள் உள்ளன.

முதலில் கோவிலின் முக்கிய உற்சவர் , வெள்ளியால் செய்யப்பட்ட போகஸ்ரீநிவாசர்,
 “காடபட்டிகள் தேவியார் பல்லவ பெருக்கடையார் மகள் சாமவை “
என்ற தொடங்கும் கல்வெட்டு , இதில் சாமவை உற்சவருக்கு அளித்த ஆபரணங்களும், அவற்றில் இருந்த வைரம், முத்து , மாணிக்கங்கள் பற்றியும், அவர் அளித்த கண்டி, கோப்பு பற்றியும் குறிப்புகள் உள்ளன.
திருமலையின் விழாக்களில் முக்கியமானவை, புரட்டாசி மாத பிரம்மோத்சவமும், துவாதசி திருநாளும்.

சோழர்களும் திருமலையும்:
இங்கு பராந்தகன், “மதிரை கொண்ட கோபரகேசரி”கல்வெட்டு , “சேரமானார் மகளார் “, முதலாம் இராஜராஜன் தாயார் , சுந்தர சோழரின் மனைவியின் கல்வெட்டு , ராஜேந்திர சோழரின் கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன.
அதிலும் , ராஜேந்திரனின் கல்வெட்டு ஒரு கதையோடு வந்தது. திருமுண்டியம் என்னும் ஊரில் , இருபத்து மூன்று விளக்குகளும் , ஒரு கற்பூரமும்  எரிக்க ஆணை , ஆனால் அது பின்பற்றாமல் போகவே, அரசன் ஒருவனை அனுப்பி விசாரிக்கிறான். உண்மை தெரிந்த பிறகு, தானம் கொடுதனவை திரும்பப் பெறப்பட்டு கோவிலின் கருவூலத்தில்  சேர்க்கப்படுகிறது.

சாளுவ நரசிம்மையாவின் காலத்தில் , ஒரு தனி நபர் வந்து கோவிலை சீரமைக்க அனுமதி கேட்கிறார். அவரும் சீரமைக்க அனுமதி அளித்து, சீரமைப்பின் போது சிதைந்த  கல்வெட்டுகளை திரும்ப வெட்ட வேண்டும் என்று ஆணையிடுகிறார்.
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் திருமலை , ஆனந்த நிலைய விமானத்தை தங்க முலாம் பூசிய , தங்க விமானமாக செய்கிறான்.  
o, sundara pandiyadeva, the brilliancy of your physic excels the luster issued by the golden vase fixed by you over the temple” – என்பதாய் இருக்கிறது அந்த கல்வெட்டு,

கபில தீர்த்தம் :
நம்மாழ்வாரின் கோவில், இந்த கோவில் , விமானம் , மண்டபம் முதலியனவற்றை பாண்டிய தேசத்தில் இருந்து வந்த ஒருவர் சீர்படுத்தி இருக்கிறார்.

திருமலை – திருப்பதி நிகழ்வுகள்:
15 நூற்றாண்டு - கோவிலின் கருவறைக்கு முன்பு திருமாமணிமண்டபமும் , இரண்டாம் கோபுரமும் கட்டப்பட்டது.
கல்வெட்டுகளில் தூண்களை பற்றியும், தரை, முன் மண்டபம், கல் அடித்தளம், அலங்காரம், வேலைப்பாடு, பீடம் போன்றவற்றை பற்றிய தகவல்கள் உள்ளது.
பிறகு, திருப்பதி நகரின் வளர்ச்சியும், கோவிலின் நிர்வாகத்தின் இடமாகவும், கோவிந்தராஜர்/ பார்த்தசாரதி கோவிலின் வளர்ச்சி பற்றியும் கல்வெட்டுகள் உள்ளது.
கோவிலின் கல்வெட்டுகளில் எழுபது முதல் எழுபத்து ஐந்து சதவிகிதம் பிரசாதம் பற்றிய தகவல்கள் உள்ளது.நிறைய விதமான உணவுகள் பிரசாதமாக உள்ளது.
அச்சுதராயாரின் ராணிகளில் ஒருவர், இறைவனுக்கு பிரசாதம் தர தானம் கொடுத்திருக்கிறார், அதன் சுருக்கம்
“வெண்பொங்கல், திருகண்ணமுது , வடை, அப்பம், அதிரசம், சீடை, சுகியம், பாக்கு , வெற்றிலை, சந்தனம் தரவேண்டும்” அந்த பிரசாதத்தை யாருக்கெல்லாம், எவ்வளவு பங்கு தர வேண்டும் என்ற செய்திகளும் உள்ளது.
ஒரு கல்வெட்டில் “அவிலாலியில்  கோவிலிற்கு சொந்தமான ஒரு கால்வாயில் மழை காலங்களில் வெள்ளம் வழிந்தால் தன சொந்த பணம் கொண்டு அதை சீரமைக்கிறார் ஒருவர் என்ற செய்தி வருகிறது.
“திருப்பாவாடை“ விழா என்ற ஒரு நிகழ்விற்காக நிறைய தானம் தரப்பட்டுள்ளது.” திருப்பாவாடை “  , என்பது இறைவன் முன் ஒரு புடவை விரித்து , அதில் வித விதமான பிரசாதங்களை பரப்பி வைத்து செய்யும் பூஜை ஆகும். காண்பதற்கே அழகாக இருக்கும் என்று மது கூறினார்.
பதினைந்தாம் நூற்றாண்டில், திருப்பாவாடை செய்ய, ஒருவர் இரண்டாயிரம் பணம் கொடுத்ததாக கல்வெட்டு உள்ளது.

அபிஷேகம் :
15 ஆம் நூற்றாண்டு அழகிய மணவாள ஜீயரின் சிடர் இராமானுஜ ஐயங்கார் ஆடி மாதம் முதல் தை மாதம் வரையிலான தக்ஷயான காலத்தில் தினமும் திருமஞ்சனம் செய்ய தானம் தந்துள்ளார்
1583 –ஆம் ஆண்டு ஆயிரம் காசுகள் வெள்ளிக் கிழமைகளில் புழுகு காப்பு செய்யவும், அலர்மேல் மங்கை தாயாருக்கு மஞ்சள் காப்பு செய்யவும் தானம் தரப்பட்டுள்ளது.
ஒரு அரசனே அர்ச்சனை செய்த நிகழ்வு. அச்சுதராயர் அவர்கள் இறைவனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ததற்கு கல்வெட்டு சான்றுகள் உள்ளது.

பிரபந்தம் ஓதுதல் :
பத்து ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் திருமலை, ஆனால் அங்கு எந்த ஆழ்வாருக்கும் சிலைகள் இல்லை. திருப்பதி கோவிலில் அவர்களின் சிலைகள் உள்ளது, காரணம் என்ன என்று தெரியவில்லை.

வேதம்: வீரப் பிரதாப யாதவராயாரின் காலத்தில் திருகலிகன்றிதாசர், என்பவர் கோவில் வேதம் பாராயணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்காக ராயர்  பத்து ஊர்களை தானமாக தந்து அதன் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் ஊருக்கும், மீதி ஐம்பது சதவிகிதம்  இருபத்து நான்கு வேத பாராயணம் செய்பவர்களுக்கு சம்பளமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆணை இடுகிறார்.
அதாவது , ஒரு மாதத்திற்கு இருவர் என்று திருமலையில் தங்கி வேத பாராயணம் செய்ய வேண்டும். இப்படியாக, இருபத்து நால்வரும் ஒரு வருடத்திருக்கு செய்ய வேண்டும். ஆனால், எட்டு மாதங்களுக்கு பிறகு, இந்த முறை சரியாக வரவில்லை என்றும், பணம் போதவில்லை என்றும் கூறப்பட்டது. மீண்டும் ஆரசாணை மாற்றப்பட்டு, பத்து ஊர்களின் மொத்த வருமானமும் வேதம் பாராயணம் செய்பவர்களுக்கே அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
அனந்தாழ்வான் என்பவர், கோவிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர். அவர் தானம் அளிக்கிறார் கோவிலின் குளங்கள், நீர் ஆதாரங்களை பாதுக்காக்க.

“சிந்து பூ மகிழும் திருவேங்கடம்” – இறைவனின் அலங்காரத்தில் முக்கிய இடம் பெறுவது மலர்கள். அதனால் இராமானுஜர் பிராமணர் அல்லாத ஸ்ரீ வைஷவர்களை நந்தவங்களை பராமரிக்கும் பொறுப்பில் நியமித்தார்.

ஆபரண தானம்:
சாமவை ,
கிருஷ்ணதேவராயர் ஏழு முறை கோவிலிற்கு வந்துள்ளார், ஒவ்வொரு முறையும் நகைகளும், காசுகளும் தானமாக வழங்கியுள்ளார்.
1. 1513 ஆண்டு  பிப்ரவரி மாதம் – தங்க முடி
2. 1513 ஆண்டு மே மாதம் – காசுகள்
3. 1513  ஆண்டு ஜூன் – ஐந்து ஊர்களின் வரிப்பணம்
4.. 1514 ஆண்டு  நிறைய தங்க காசுகள், கனகாபிஷேகம் , பதக்கம், குண்டலங்கள்
5.1517 ஆண்டு போரின் வெற்றியை கொண்டாட வருகிறார். அவர் ராணி நிறைய தானங்கள் அளிக்கிறார் . தங்க விமானதிற்காய் 30000 காசுகள்
6. 1518 ஆண்டு   அவர் அவருடைய குழந்தை ,திருமலை ராயருடன் வருகிறார். நிறைய தானங்களும் , ஆபரணங்களும் அளிக்கிறார்.  
7. 1521 ஆண்டு -  பிதாம்பரம் , சாமரம் தங்க கைப்பிடிகளுடன், பதக்கங்கள்.

விழாக்கள் :
பிரம்மோத்சவம்
வசந்தோட்சவம்
திருமலையில் உள்ள பிற சன்னதிகள்:
வராஹா சுவாமி – பதிமூன்றாம் நூற்றாண்டு
யோக நரசிம்மர் சன்னதி / வேங்கடத்து ஹரி
ராமர் சன்னதி
வரதராஜ சுவாமி

ராமானுஜரும் திருமலையும்:
எந்த கல்வெட்டு தகவல்களும் முழுமையாக இல்லை. “ வரையும் என் உடையார், அனந்தாழ்வான் வேங்கடத்துறையார் “ என்று ஒரு பகுதி கல்வெட்டு முழுமையாக கிடைக்காமல் உள்ளது.
ஜீயர்களும் திருமலையும்: இவர்கள் திருமலையின் பொறுப்பாளர்கள் என கொள்ளலாம். முல்லை திருவேங்கட ஜீயர் என்பவரே முதல் ஜீயர். கல்வெட்டுகளில் “ஜீயர்களின் சீயானும் “ என்று வருகிறது.

மகந்து மடம் (Mahant mutt)

ஹாதி ராம்ஜி என்ற ஒருவரே இந்த மடத்தின் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு திருமலையப்பர் மீது மிகுந்த பக்தி. தினமும் கோவிலுக்கு சென்று இறைவன் முன் நின்று அவரை பார்த்துக்கொண்டு இருப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் கோவில் நிர்வாகம் இதை அனுமதிக்கவில்லை.இதன் காரணமாக அவர் மனம் வேதனைப்பட, இறைவனே தினமும் இரவில் அவரோடு வந்து இருந்து பேசி , நேரம் செலவிட்டாராம். அப்படியே இவரோடு தாயம் விளையாடுவாராம், விடிந்து கோவில் திறப்பதற்குள் கோவிலுக்கு சென்று விடுவாராம். இப்படி போய் கொண்டிருந்த போது, ஒருநாள் இறைவன் கால தாமதம் ஆனதால், செல்லும் போது அவருடைய வைர நகை ஒன்றை மடத்திலேயே விட்டுவிட்டாராம். கோவிலில் உள்ளவர்கள் நகையை காணமல் தேட, அது மடத்தில் இருக்க பிரச்னை பெரிதாகி விட்டது. ராம்ஜி , இறைவன் தன்னோடு விளையாட வருவதையும், நகையை அவரே விட்டுவிட்டு போனதையும் கூற, யாரும் பொருட்படுத்தவில்லை. அப்படியாய் இருப்பின் , உம்மை ஒரு அறையில் பூட்டி , கட்டு கரும்புகளையும் உள்ளே வைக்கிறோம் , இறைவன் ஆருள் இருப்பின் காலைக்குள் கரும்புகளை தின்று முடிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். பூட்டியும் வைகிறார்கள். இறைவன் சில யானைகளை (ஹாதி) அனுப்பி , கரும்புகளை தின்னவைக்கிறார். ராம்ஜியின் பெருமை மக்களுக்கு தெரிகிறது. இப்படியாய் ஒரு நிகழ்வும், அதன் சிலையும் திருமலையில் உள்ளது.

தங்க கோபுரம்:
ஆறு முறை தங்க விமானத்திற்காக தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பத்மாவதி தாயார் பற்றி ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே உள்ளது.
அளவுகோல்: மலைக்கினிய நின்றான் கோல் என்பது அதன் பெயர். அதாவது மலைக்கினிய நின்றான்
 ஆழாக்கு, மலைக்கினிய நின்றான் நாழி என்று எதை அளந்தாலும் மலைக்கினிய நின்றான் என்ற பெயரோடு வருகிறது.
பதினான்காம் நூற்றாண்டில் வெட்டிய கல்வெட்டில் திருநின்றவூர் உடையார் எழுத்து என்று வெட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நானூறு வருடம் இந்த பெயர் கல்வெட்டுகளில் உள்ளதாம், அதனால் இது ஒரு தனி நபரின் பெயர் இல்லை, ஒரு குழுவின் பெயராக இருக்கலாம் என்று கூறினார்.

ஓம்படை கிளவி – கல்வெட்டுகளில் , தானமாக கொடுதனவையை சிதைக்கும் செயல் புரிபவருக்கு தரும் சாபங்களை பற்றி கூறுவது. ஆனால் இந்த 1200  கல்வெட்டுகளில் ஒன்று, இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே இந்த சாபம் வருகிறது.

மாற்றன்னம்- இந்த வார்த்தை பிரசாதங்களில் சொல்லப்படும் கல்வெட்டில் நிறைய வருகிறது. இதை மாற்று அன்னம் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆதாவது, தேவகி தாயார் கிருஷ்ணனின் பெற்ற தாயாக இருந்தாலும் அவரின் சிறு வயது லீலைகளை அனுபவிக்கவில்லை. அதன் காரணமாக மறுபிறவியில் பெருமாளை வளர்க்கும் ஆசை கொள்கிறார். வகுலா தேவி என்று கூறப்படும் அவர், திருவேங்கடமுடையானை வளர்க்கும் போது அன்னம், பாலாடை கொண்டு  ஒரு உணவு செய்து அவருக்கு தருவாராம். அத்துணை உயர்ந்த உணவாக கருதப்பட்ட உணவு இன்று கோவிலில் பிரசாதமாக உள்ளது. இறைவனின் உதடுகள் வரை எடுத்துச்செல்லப்படும் ஒரே உணவு இதுதான். ஒரு மண் பானையில் வைத்து இதனை நெய்வேதனம் செய்கிறார்கள். மற்ற எந்த பிரசாதமும் குலசேகரப்படியை தாண்டி இறைவனை அடைவதில்லை. மேலும் மாற்றன்னம் மகாலட்சுமி தாயாருடன் கூட இறைவன் பகிர்ந்துக்கொள்வதில்லையாம்.

தவறுகள் இருப்பின் மன்னித்துக்கொள்ளுங்கள். நான் கேட்டு பதிவு செய்தனவற்றை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் , தமிழ் படுத்தும் போது சில பிழைகள் இருக்கும் என்று நினைக்கிறன்.